திலகபாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும் இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப் படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக உள்ளன. அதற்கான பெண்ணிய மொழியும் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணிய மொழியின் அகராதியை நான் இங்கு சொல்ல முடியாது. தெரிந்தவர் தெரிந்து கொள்வார்கள். இதெல்லாம் போக, பெண்ணிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு வழிகாட்டியாக தன்னை வரித்துக்கொண்டுள்ள ஒரு பத்திரிகாசிரியர், ”உங்க கவிதையிலே கொஞ்சம் பெண்ணிய மொழியும் தூவிக்கொண்டாங்க போட்டிரலாம்” என்று தன் பங்குக்கு உதவுவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ”சம்மதம் இல்லை என் கவிதையில் என் மொழியும் என் பார்வைகளும் அனுபவங்களும் தான் இருக்கும்”, என்றால், பெண்ணியம் பேசாத பெண் கவிஞர் கவிஞராகவே அங்கீகரிக்கப்படமாட்டார். சங்கப் பலகையில் இடம் கிடைக்காது தான்.
ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள். வாசிப்பு என்பது கல்வித் தேவைகளுக்காகவும், அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் இங்கு நிகழ்கின்றது.