சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும். புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் செயலாகவே படும்.பொறுப்புப் பெற வேண்டும் என பெரிதாக முயல்வர்.அதிக பட்சமாக பட்டணத்திற்கு அனுப்பி வைத்து புதிய அத்தியாயத்திற்கு அடிகோலிடுவர்.முற்றுப்புள்ளி யில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிய கவிஞரின் அனுபவத்துடன் கவலையும் வெளிப்பட்டுள்ளது.
ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம், கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம்; என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.