[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை – பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் – ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.