ஈழத்துப் பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு மற்றும் விமர்சனம், தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் பற்றிய கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை ‘வரலாறு’ என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.