இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்’ எனக் கூறிய அவர், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். ‘அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை’ என அவர் கூறினார்.