– ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில் வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.
[ ஏற்கனவே ‘பதிவுகள்’ இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] ‘நாவலர் பார்ம்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது.