சதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.