கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.
2012 ஜனவரியில் செயற்பட ஆரம்பித்த எழுநா ஊடக நிறுவனம், 2012 / 2013ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான செயற்பாடுகளைப் பூர்த்திசெய்து 2013 / 2014ஆம் ஆண்டு பருவகாலச் செயற்பாடுகளுக்குள் காலடி வைக்கின்றது. எழுநா செயற்பட விரும்பும் வெளிகளில், எழுநாவின் நண்பர்கள் வட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகளே கடந்த காலத்தில் வெளியீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் சமூகங்களின் பல்வகைமையை உறுதிசெய்யுமுகமாக பிரதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, எழுநா வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது, 2013 / 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில், எழுநா வெளியீடுகளுக்கான கோரலை பகிரங்கமாக முன்வைக்கின்றது. இளைய படைப்பாளிகள், அறிமுகமாகியிருக்காத எழுத்தாளர்களின் வெளியீடுகளை எழுநா ஊக்குவிக்க விரும்புகின்ற அதே நேரம், வெளியீட்டு வசதிகளற்ற / வெளியீட்டு வாய்ப்புக்கள் குறைந்த தரமான பிரதிகள் சார்ந்தும் அதிக கவனம் கொள்கின்றது.