செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட எண்ணம் இல்லை. தருமு சிவராமு ஒருவர் தவிர. எழுத்து பத்திரிகையில் வெளிவந்த தம் கவிதைகளைப் பார்த்துத்தான் தான் சி.சு. செல்லப்பாவுக்கு புதுக்கவிதை பற்றிய ஞானமே செல்லப்பாவுக்கு சித்தித்தது என்று பேச எழுத ஆரம்பித்தார். அன்றைய சிற்றிதழ் சூழலின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் தம் பின்னால் ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கத் தொடங்கியதாக அவர் நம்பினார்.