இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. ‘மனிதர்கள் நல்லவர்கள்’ என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது. அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில். இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது. இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.