நாடகத் தமிழ்

[அ.ந.க. வின் இக் கட்டுரை ‘தமிழோசை’ கார்த்திகை 1966 இதழில் வெளி வந்தது. இதன் மறு பகுதி எம்மிடம் இல்லை. யாரிடமாவதிருந்தால் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் தரப்படும். அ.ந.க. வின் சிறுகதைகள் , கட்டுரைகள், கவிதைகள் ஏனைய ஆக்கங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் வழங்கப் படும். ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.]

- அறிஞர் அ.ந.கந்தசாமி -முத்தமிழின் முடிவான தமிழ் நாடகத் தமிழ் என்று நாம் பல படப் பேசிக் கொண்டாலும்நாடகத் தமிழ் என்று ஒன்று உண்மையிலேயே கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு தமிழில் நாடகத் தமிழில் நாடகம் இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் கூட்டில் நிறுத்தப்பட்ட வழக்கின் எதிரிபோல் நொண்டிசாக்குகள் கூற ஆரம்பித்து விடுகின்றனர் தாமே தமிழின் காவலர்கள் என்று தம்மைப் பற்றித் தவறாகக் கணக்கிட்டு வைத்திருக்கும் ஒருசிலர். பூம்புகாரும் கபாடபுரமும் கடல் கோளுக்காளானதைச் சுட்டிக்காட்டி ‘எத்த்னை எத்தனை நாடகங்களைக் கத்துங் கடல் விழுங்கிக்கொண்டதோ?’ என்று கூறி நிறுத்தி விடுகின்றார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதை முழுவதும் உண்மையெனக் கொண்டாலும்கூட கடல் கோள் நிகழ்ந்து இப்பொழுது எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? கடல் கோளுக்கும் இன்றைக்குமிடையில் கழிந்த ஆயிரக்கணக்கான வருடங்களுள் பல மொழிகள் புதிதாக இலக்கணம் வகுத்து புத்திலக்கியங்களும் கண்டு முன்னேறி விட்டன.ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஜந்து நூறு வருடங்களுள் தானே அவ்விலக்கியம் உலகின் தலையாய இலக்கியங்களுள் ஒன்றாக மலர்ந்திருக்கின்றது. நாடகத் துறையில் உலக மகா மேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்து மறைந்து நானூறு வருடங்களேயாகின்றன.இந்நிலையில் எப்போதோ நிகழ்ந்த சிலவற்றைக் கூறி நம்மை நாமே ஏமாற்றுதல் கையாலாகாத்தனம்.  உண்மையென்னவென்றால் தமிழ் மொழியினர் பல்லாயிர வருடங்களாகவே திறனும் ஊக்கமுமற்ற ஒரு சமுதாயாமாக மாறி விட்டனர். தமிழர்களாகிய நாம் இன்றைய சாதனையற்ற வாழ்வின் குறைபாட்டை மறக்கவும் மறைக்கவும் பழம் பெருமை பேசிப் போலி இறுமாப்படைய ஆரம்பித்து விட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்த நோயல்ல. பல நூற்றுக்கணக்கான வருடங்களாகவே தமிழர்கள் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.

Continue Reading →

நான் ஏன் எழுதுகிறேன்?

– அறிஞர் அ.ந.க.வின் ‘நான்ஏன் எழுதுகிறேன்?’ என்னுமிக் கட்டுரை ஏற்கனவே ‘தேசாபிமானி’, ‘நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு. ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்-

- அறிஞர் அ.ந.கந்தசாமி -அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். “சிந்தனையும் மின்னொளியும்” என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய ‘ஈழகேசரி’யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

Continue Reading →

நாடக விமர்சனம்: “மதமாற்றம்”

[‘மதமாற்றம் ‘நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த ‘செய்தி’ இதழில் தனது நாடகமான ‘மதமாற்றம்’ கொழும்பில் மேடையேற்றப்பட்ட காலகட்டத்தில் எழுதிய விமர்சனக் கட்டுரையிது.ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள்-]

நாடக விமர்சனம்: "மதமாற்றம்" - அ.ந.கந்தசாமி -- அறிஞர் அ.ந.கந்தசாமி -சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘தியாக பூமி’ சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. ‘கல்கி’ கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. ‘யமன்’ என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

கொழும்பில் எனது ‘மதமாற்றம்’ நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

Continue Reading →