[அ.ந.க. வின் இக் கட்டுரை ‘தமிழோசை’ கார்த்திகை 1966 இதழில் வெளி வந்தது. இதன் மறு பகுதி எம்மிடம் இல்லை. யாரிடமாவதிருந்தால் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் தரப்படும். அ.ந.க. வின் சிறுகதைகள் , கட்டுரைகள், கவிதைகள் ஏனைய ஆக்கங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் வழங்கப் படும். ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.]
முத்தமிழின் முடிவான தமிழ் நாடகத் தமிழ் என்று நாம் பல படப் பேசிக் கொண்டாலும்நாடகத் தமிழ் என்று ஒன்று உண்மையிலேயே கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு தமிழில் நாடகத் தமிழில் நாடகம் இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் கூட்டில் நிறுத்தப்பட்ட வழக்கின் எதிரிபோல் நொண்டிசாக்குகள் கூற ஆரம்பித்து விடுகின்றனர் தாமே தமிழின் காவலர்கள் என்று தம்மைப் பற்றித் தவறாகக் கணக்கிட்டு வைத்திருக்கும் ஒருசிலர். பூம்புகாரும் கபாடபுரமும் கடல் கோளுக்காளானதைச் சுட்டிக்காட்டி ‘எத்த்னை எத்தனை நாடகங்களைக் கத்துங் கடல் விழுங்கிக்கொண்டதோ?’ என்று கூறி நிறுத்தி விடுகின்றார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதை முழுவதும் உண்மையெனக் கொண்டாலும்கூட கடல் கோள் நிகழ்ந்து இப்பொழுது எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? கடல் கோளுக்கும் இன்றைக்குமிடையில் கழிந்த ஆயிரக்கணக்கான வருடங்களுள் பல மொழிகள் புதிதாக இலக்கணம் வகுத்து புத்திலக்கியங்களும் கண்டு முன்னேறி விட்டன.ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஜந்து நூறு வருடங்களுள் தானே அவ்விலக்கியம் உலகின் தலையாய இலக்கியங்களுள் ஒன்றாக மலர்ந்திருக்கின்றது. நாடகத் துறையில் உலக மகா மேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்து மறைந்து நானூறு வருடங்களேயாகின்றன.இந்நிலையில் எப்போதோ நிகழ்ந்த சிலவற்றைக் கூறி நம்மை நாமே ஏமாற்றுதல் கையாலாகாத்தனம். உண்மையென்னவென்றால் தமிழ் மொழியினர் பல்லாயிர வருடங்களாகவே திறனும் ஊக்கமுமற்ற ஒரு சமுதாயாமாக மாறி விட்டனர். தமிழர்களாகிய நாம் இன்றைய சாதனையற்ற வாழ்வின் குறைபாட்டை மறக்கவும் மறைக்கவும் பழம் பெருமை பேசிப் போலி இறுமாப்படைய ஆரம்பித்து விட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்த நோயல்ல. பல நூற்றுக்கணக்கான வருடங்களாகவே தமிழர்கள் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.