க.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல. ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த ‘வியத்தலும்-பாராட்டுதலும்’ என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரியக் காரணமாயிற்று. அம்மனிதரோடு ஒப்பிடுகையில் எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர் கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை. மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தாம். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.