சிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில் எழுத்தும் எழுத்தாளரும் என்ற நிகழ்ச்சிக்காக ( நேரடி ஒலிப்பதிவு – நேரடி ஒலிபரப்பு ) என்னை பேட்டிகண்ட குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர் செ.பாஸ்கரன் பேட்டியின் இறுதியில் ஒரு கேள்வி – ஆனால் ஒரே பதில் தரவேண்டும் என்றார். கேளுங்கள் என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் யார்? – இதுதான் கேள்வி. என்னை மிகவும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய கேள்வி. உடனடியாக பதில் சொல்ல சற்று தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும் எனக்குப்பிடித்தமான பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.எனது திரும்பிப்பார்க்கின்றேன் தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள் எனக்கு பிடித்தமானவர்கள்தான். ஆனால் – எனக்குப்பிடித்த ஒரு எழுத்தாளரின் பெயரையும் ஏன் அவரை எனக்குப்பிடித்தது என்றும் சொல்ல வேண்டும். சில கணங்கள் யோசிக்கவைத்த கேள்வி அது. எனது மௌனத்தைப்பார்த்துவிட்டு மீண்டும் – உங்களுக்குப்பிடித்தமான தமிழ் எழுத்தாளர் யார்? சொல்லுங்கள் என்றார் பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான எழுத்தாளர் குரும்பசிட்டி இரசிகமணி கனகசெந்திநாதன் எனச்சொன்னேன். உடனே அவர் தனக்குப்பிடித்தமான எழுத்தாளர் மு. தளையசிங்கம் என்றார். எனக்கும் அவரை நன்கு பிடிக்கும் என்றேன்.