(1) பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!
எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா? நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும்.