பண்டைத் தமிழரின் வாழ்வியலை இன்றைக்கு எடுத்துக் காட்டும் சிறந்த படைப்பு புறநானூறு ஆகும். புறநானூற்று 400 பாடல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருந்து படைக்கப் பட்டவைகளும் அல்ல. ஒவ்வொரு பாடலும் தனி மனித உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகும். வாழ்ந்த பண்டைத் தமிழரின் பெருமையையும், பண்பாட்டையும் கவிப் புலமை பெற்ற படைப்பாளர்கள் தாங்கள் நேரில் கண்டவற்றைக் கண்டபடியே படைத்த படைப்புகளாகும். எனவேதான் பண்டைத் தமிழ் அக இலக்கியங்கள் போல வருணனையோ, கற்பனையோ இடம்பெறவில்லை.
படைப்பாளர்கள் தாங்கள் படைத்த காலத்தில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்பட்ட நிகழ்வுகளைக் கவிதைகளாகப் படைத்திருக்கிறார்கள். எனவேதான் பண்டைத் தமிழர் வாழ்வை உணர்த்துகின்ற கலங்கரை விளக்கமாகப் புறநானூறு விளங்குகிறது. படைப்பாளர்கள் தாங்கள் கண்டவற்றை மட்டும் படைக்காது, தங்களுக்குள்ளே நிகழ்ந்த வாழ்வியல் நிகழ்வுகளையும் பதிவு செய்து கவிதையாகத் தந்துள்ளனர். எனவே பல பாடல்கள் கையறுநிலைப் பாடல்களாக, அதாவது வறுமையும், வறுமை நீங்க வேண்டுகின்ற பாடல்களாகவும் விளங்குகின்றன. வறுமையைச் சுட்டுகின்ற பாடல்களைப் போல, மக்கள் வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் அமைந்துள்ள உயர்வு நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தெரிவிக்கும் பொழுது மக்களின் வாழ்வுக்கு உயர்வு தருகின்ற நிலையில் அல்லது அரசரின் ஆட்சி சிறப்புற்றிருக்கும் நிலையில் அதற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒன்றான வாணிக நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாணிகச் செய்திகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.