எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ‘ ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்’ அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி….. இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக ‘அம்மா மெத்தப் பசிக்கிறதே’, ‘ஓ தமிழகமே’, ‘தசாவதாரம்’, யாரடியம்மா ராசாவே’, போன்றவற்றைக்குறிப்பிடலாம். .’அரசடி வைரவர்’ தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.