இடம்: ZOROASTRIAN CENTRE, 440 Alexandra Avenue, Harrow HA2 9TL (opposite Rayners Lane Tube Station) | நாள்: ஏப்ரில் 25, 2015 (சனிக்கிழமை)…
ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன். இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.