‘இலங்கையிலும்;, அகஸ்தியர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து வந்ததின் பின்னரும் அவருடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்ததையும்; தனது ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற தனது நூலுக்கு அகஸ்தியர் அணிந்துரை வழங்கி அதனை நூலாக்கம் பெறுவதற்கு உதவினார் என்றும்’ லண்டன் ஹரோ நகராட்சி மன்ற உறுப்பினர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும், நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ நூல் வெளியீட்டில் உரையாற்றும்போது லண்டன்; புதினம் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார். அகஸ்தியரின் துணைவியான நவமணியின் பிரசன்னம் தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாயும், அகஸ்தியரின் முற்போக்கு எழுத்துக்களுக்கு நவமணி பக்கபலமாகத் திகழ்ந்தாகவும், அவரின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும்’ மேலும் அவர் தெரிவித்தார்.
‘20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகஸ்தியர் போன்ற சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இலங்கையின் தேசிய பத்திரிகைகள் தயக்கம் காட்டின என்றும் ஆனால் அகஸ்தியர் அவர்கள் தனது பொதுவுடமைக் கொள்கையிலிருந்து தளராமல், பேனாவை வலிமை மிகுந்த ஒரு ஆயுதமாகக்கருதி, மக்களோடு பின்னிப்பிணைந்த தத்துவங்களை படைப்புகளாக்கி, தொடர்ந்த அவரது எழுத்தாற்றலால் மிகுந்த செல்வாக்கை பெற்றார்’ என்று மூத்த பத்திரிகையாளர் பொன் பாலசுந்தரம் அவர்கள் அகஸ்தியர் பற்றிப்பேசுகையில் தெரிவித்தார். புரட்சிகர எண்ணங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அகஸ்தியர் மக்களின் அபிலாசைகளை கருப்பொருளாகக் கொண்ட படைப்புக்களால் ஒரு புதிய மக்கள் யுகத்தை அமைக்க முடியும்; என்பதை வாழ்நாள் பணியாகக் கருதியவர் அகஸ்தியர்’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.