எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. ‘சி.ஆர்.கொப்பி’ என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.
ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.
1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்
தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.