முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை வேலைக்குச்சென்று, அன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை, இந்த நேரத்தில் யார் வந்து கதவு தட்டி எழுப்புகிறார்கள்…? எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று, மீண்டும் வருகிறாரோ…? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ…? அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத் தட்டுகிறார்கள். போர்த்தியிருந்த போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள். தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள். ” என்ன விடயம் ? ” எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, ” இதில் படுத்திருந்தவர் எங்கே…?” எனக்கேட்டார்கள்.
” அவர் தனது நண்பரை பார்க்கச்சென்றிருப்பார்” என்று பொய் சொன்னேன்.
” நண்பரைப்பார்க்கச்செல்லும்போது பாணில் சாண்ட்விஷ்ஷ_ம் செய்து எடுத்துச்செல்வரா…?” என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு நான் பதில்சொல்லத்தெரியாமல் விழித்தேன். மற்றவர் கையிலிருந்த வோக்கி டோக்கியில் ஏதோ பேசினார்.
சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி தனது அடையாள அட்டையை காண்பித்தவாறு எனது அறையிலிருந்து வேலைக்குச்சென்ற அந்த இளைஞருடன் வாசலில் தோன்றினார். எனக்கு யாவும் அந்தக்கணமே புரிந்துவிட்டது.
வீட்டில் முன்னர் இருந்துவிட்டு வேறு இடங்களில் வேலைதேடிக்கொண்டு விடைபெற்றுவிட்ட மூன்று பேருக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்களை ஒரு அதிகாரி கைப்பற்றினார்.