அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான ‘அருவி’ இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.