கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும். இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால், உல்லாசப் பயணியாக சென்ற அந்த நாட்டில் ஹோட்டலில் ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இந்த ஹோட்டல் ஏனையவை போன்றது அல்ல. எகிப்தின் அரசரால் அக்காலத்தில் ஒரு பெரிய சாம்ராச்சியத்தின் மகாராணி தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த ஹோட்டலின் பின்னால் ஓரு வரலாறு இருக்கிறது. எகிப்தில் எங்குதான் வரலாறு இல்லை என நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட முகம்மதலியின் பேரனாகிய கெடிவ் இஸ்மயில் (Khedive Ismail) காலத்தில் சூயஸ் கால்வாய் திறந்து வைக்கும்போது அந்த வைபவத்திற்கு வருகை தரும் முக்கிய விருந்தாளியை தங்கவைக்க இந்த மாளிகை கட்டப்பட்டது.
மாளிகையின் பெயர் ஜெசிரா பலஸ் (Gezirah Palace ) பிரான்ஸ் நாட்டின் மகாராணி தங்குவதற்காக பிரான்சில் உள்ள அரசமாளிகையின் பிரதியாக வடிவமைத்து கட்டப்பட்டது இந்த மாளிகை. போர்க்காலத்தில் வைத்தியசாலையாக மாறியது. மாளிகை இப்பொழுது ஆயிரம் அறைகள் கொண்ட ஹோட்டலாக உருவாகியுள்ளது. நைல் நதிக்கரையில் வாசல் வைத்து வரவேற்பு பகுதி பறவையின் உடலாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அறைகள் இரண்டு சிறகுகளாகவும் கெய்ரோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
அக்காலத்து அரசமாளிகைகள் ஹோட்டலாக தற்பொழுது இந்தியாவில் உள்ளன. அழகையும் அமைப்பையும் பாதுகாப்பதற்கு உதவும் அதே நேரத்தில் சமானியர்கள் பார்த்து மகிழவும் வசதியாக உள்ளது.
இரவுச் சாப்பாட்டை எகிப்தின் உணவாக சாப்பிடவேண்டும் அத்துடன் வெளியே சென்று பார்ப்பதும், சாதாரண மக்களையும் சுற்றாடலை அறிவதற்கும் உதவும் என்பதால் வெளியே வழிகாட்டி இல்லாமல் சென்றோம். எனது மனதில் நைல் நதியில் உருவாகிப் பின்பு ஆபிரிக்கா எங்கும் மிக விரும்பி உண்ணப்படும் நைல் பேச் எனப்படும் மீனை ருசித்து பார்க்க எண்ணம் இருந்தது. அவுஸ்திரேலியா நன்னீர் மீனான பரமண்டியை (Barrmundi) சாப்பிட்டதால் அதை விட ருசியாக நைல் பேச் இருக்கும் என்று கேள்வி ஞானம். ஆபிரிக்காவில் இருந்த எனது நண்பன் கூறினான், ‘பரமண்டி நாக்கில் உருகும் என்றால் நைல்பேச் நாக்கில் கரையும்.’ அந்தக் கூற்றில் உள்ள உண்மையை அறிந்து கொள்ள ஆவல் இருந்தது.
பல சந்துகள் கடந்து உணவு விடுதியைத் தேடிச் சென்ற போது பலகாலம் மழை கண்டிராத வரண்ட தரைகள் குறுகிய சந்துகள் உடலுழைப்பாக வேலை செய்யும் தொழிலாளர்கள் தென்பட்டார்கள். ஆண்டவன் ஆதாமின் விலா எலும்பை தேடும் நேரத்தில் உள்ள நிலைமை போன்று, மூலை முடுக்குகள் எங்கும் பெண்களைக் காணவில்லை.
கட்டிடங்கள் மனிதர்கள் தாவரங்கள் எல்லாம் இந்தியாவின் ஜெய்பூர் பகுதியால் செல்வது போன்ற உணர்வைத்தந்தது. எல்லாம் பாலை நிலத்தின் வெளிப்புறக்காட்சிகள். மாலை நேரமானதால் நாங்கள் தேடிய உணவு விடுதியை கண்டு பிடிப்பதற்கு சிரமமாக இருந்தது. எங்களுடன் வந்த பெண்மணிகள் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம் என்றனர். பிரயாண களைப்பு அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது. எங்கள் ஆங்கிலத்திற்கும் எகிப்திய அரபு மொழிக்கும் நடந்த சிறிய மொழிப் போராட்டத்தின் பின்பாக, அந்த ஹோட்டலை அடைந்தபோது, நாங்கள் எதிர்பார்த்த மேசைகள் கதிரைகள் மற்றும் பாலிஷ் செய்த யுனிபோர்ம் அணிந்த பரிமாறுபவர்கள் என்ற நாகரீகமான சூழ்நிலையில் அந்த உணவு விடுதி இருக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே சென்ற போது மிகவும் இருட்டாக இருந்தது. உள்ளே செல்லுவதற்கு வாசலில் தயங்கிய போது, உட்பகுதி யாழ்ப்பாணத்தில் புகையிலை போட்டு வாட்டும் குடில்போல் புகை மண்டலமாக காட்சிஅளித்தது. முன்வைத்த காலை பின்வைக்காமல் மெதுவாக அடியெடுத்து உள்ளே சென்றால் உள்ளுர்வாசிகளுடன் பல ஐரோப்பியரும் ஹு க்கா எனப்படும் நீண்ட குழாய் மூலம் புகையிலையை புகைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் பாரசீகத்தில் தொடங்கி பின்பு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகையிலையை வைத்து அதை கரியின் ஊடாக எரித்து புகையை தண்ணீர் ஊடாக இழுத்துப் புகைத்தல் இப்பொழுது மத்திய கிழக்கு அரேபிய நாட்டின் கலாச்சார கூறாகிவிட்டது.
இந்தப் புகையில் அப்பிள் திராட்சை என பல வாசனைகளையும் சேர்த்து புகைத்தபடி கோப்பியை குடிப்பது ஒரு பொழுது போக்காகிவிட்டது. இதற்காக ஏராளமான கபேக்கள் தெரு எங்கும் உள்ளன. மேற்கு நாட்டவர்களுக்கு மதுசாலைகள் கலாச்சாரத்தில் இடம் பெறுவது போல். நாங்கள் சென்ற உணவுச்சாலையிலும் மேற்கு நாட்டவர்கள் பியரை குடித்துக் கொண்டு உணவு வரும் வரையும் இந்த புகைத்தலில் ஈடுபட்டார்கள்.
உணவகங்கள் எங்கும் புகைத்தல் தடைசெய்யப்பட்ட அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எனக்கு ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தது. மற்றவர்களுக்கு வெறுப்பாக இருந்தது. குறைந்த பட்சம் என்னோடு வந்தவர்களில் எனக்கு மட்டும் இள வயதில் சிகரட்டை பிடித்த அனுபவம் உள்ளது. உள்ளே சென்று அமர்ந்ததும் கொஞ்சம் புகையோடு வந்த சிறிதளவு பிராணவாயுவை சுவாசிக்க எனது நாசி பழகிவிட்டது.
அன்று நைல் பேர்ச் இல்லை. எனக்கு ஏமாற்றம். கத்தரிக்காயை எண்ணெயில் வாட்டி அத்துடன் ஆட்டிறச்சியும் சோறும் கொண்டு வருவதற்கு ஓடர் கொடுத்திருந்தோம். உணவு வரும் வரையும் நானும் எனது நண்பனது மகன் அனுஸ்சும் ஹுக்காவை புகைப்பது எனத் தீரமானித்து கொண்டுவரச் சொன்னோம். புகைத்தல் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எனது மனைவியாருக்கு முகம் கோணியது.
பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுமுறி நாங்கள் உண்ண வேண்டும் என்றேன் எங்களுக்கு திராட்சை வாசத்துடன் புகைப்பதற்கு கொண்டு வரப்பட்டது. இது சாதாரண சிகரட் புகைத்தலில் இருந்து சிறிது வேறுபடுகிறது தண்ணீரில் புகையிலையில் இருந்து வரும் தார் எனப்படும் கரியே புகைத்தலின் போது முதலாவதாக உணரப்படுவது. அதுதான் நுரையீரலில் துசிபோல் படிகிறது. அந்தத் தார் இங்கு தண்ணீரில் கரைந்து விடுகிறது.மேலும் புகை தண்ணீர் ஊடாக வருவதால் சூடாக இருப்பதில்லை. ஆனால் சராசரியாக ஹுக்காவை அதிக நேரம் புகைப்பதால் அதிகமான நிக்கெட்டின் செல்வதுடன் உடலில் பல தீங்குகளை உருவாக்குகிறது. இந்த நிக்கொட்டினே புகைத்தலின் உந்து சக்தியாகிறது.
மறுநாள் வெள்ளிக்கிழமை கெய்ரோ மியூசியம் செல்வதாக இருந்தது. அந்த மியூசியத்தின் ஒரு பக்கத்தில் டாகிர் ஸ்குயர் (Tahrir Square) உள்ளது. எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பழைய ஜனாதிபதியாக இருந்த முபாரக் அகற்றப்பட்ட பின்பு முக்கியமான அம்சமாக இந்த வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்திவிட்டு, இந்த ஸ்குயரில் மக்கள் கூடி ஆற்பாட்டம் செய்வார்கள். ஆரம்பத்தில் முபாரக்குக்கு எதிராக ஒன்றாக இருந்த மக்கள் தற்போதய முஸ்லீம் பிறதகூட் தலைமையில் அரசாங்கம் அமைத்தபோது இரண்டாகப் பிரிந்தார்கள். எகிப்தில் இந்தப் பிரிவு மேற்கு நாடுகளில் மற்றைய நாடுகளில் பழமைவாதக்கட்சிகள் மற்றும் தொழிற்கட்சிகள் (Conservative Liberal) போன்ற தன்மையுடையவை. ஆனால் இப்படியான முரண்பாட்டை தீர்க்கும் பொறிமுறை இன்னமும் உருவாகவில்லை. அரேபிய நாட்டில் அப்படியான பொறிமுறை உருவாவதற்கு சாத்தியமான நாடும் எகிப்துதான். அதன் மூலம் முன்னுதாரணமாக நடைபெற வாய்ப்புண்டு.
கெய்ரோ மியூசியம் செல்லாமல் காலையில் சிற்றாடல் எனப்படும் முக்கிய கோட்டைக்குச்சென்றோம். ஜெருசலேமைச் சுற்றி சிலுவை யுத்தம் நடந்தபோது அங்கு போரிட்ட மேற்கு ஐரோப்பிய கத்தோலிக்க அரசுகள் எகிப்தை தாக்கலாம் என எண்ணிய சலாடினால் 1176 இல் இந்த கோட்டை கட்டப்பட்டது. ஆனால் சலாடினால் முடிக்கப்படவில்லை பின்னால் வந்தவர்களால் இந்தக் கோட்டை முடிக்கப்பட்டது இங்கிருந்துதான் அடுத்த 700 வருடங்கள் முழு எகிப்தின் ஆட்சி நடந்தது.
அக்காலத்தில் அங்கு அழிக்கப்பட்ட 19 நூற்றாண்டின் பள்ளிவாசல் மற்றும் மியூசியம் என்பன மீள்நிர்மாணம் செய்யப்பட்டன. எகிப்தை பார்க்க வருபவர்கள் இந்த இடத்தை தவறாமல் பார்ப்பார்கள். இந்தப் பகுதி சிறிய மலையில் இருப்பதனால் இங்கு இருந்து பார்க்கும் போது முழுக் கெய்ரோவும் தெரிகிறது.
இந்தக் கோட்டையில் அழகான பள்ளிவாசல் அலபஸ்ரார் என்ற கல்லால் கட்டப்பட்டுள்ளது. இந்த அலபஸ்ரர் என்பது பொதுவாகச் சொன்னால் நமது ஊர் பளிங்கு. ஆனால் எகிப்தில் கல்சியம் காபனேற் கலந்தது. ஆனால் ஐரோப்பிய பளிங்கு ஜிப்சம் வகை சேர்ந்தது. அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய பளிங்கு சிறந்தது என்பார்கள்.
இந்த அலபஸ்ரரை புராதன மன்னர்கள் தங்களது கட்டிட வேலைகளுக்கு பாவித்திருக்கிறர்கள். சிலைகள் வாசனைப் போத்தல்கள் ஆலயங்களின் ஜன்னல்கள் என்பனவற்றுக்கு பாவிக்கப்படும் இந்தப் பளிங்கு எகிப்தில் பிரபலமானது. தூய்மையான பளிங்கு வெள்ளை நிறமானது. மற்ற மூலப் பொருட்களில் சேர்க்கை இருந்தால் அவற்றிற்கு ஏற்ப வண்ணம் பெறுவது இந்த அலபஸ்ரர் ஆகும். இந்த அலபஸ்ரர் பள்ளிவாசல் முகம்மதலி தனது இறந்த மகனது நினைவாக கட்டியது எனச்சொல்லப்படுகிறது. ஆனாலும் இதற்கு முன்பு மாலுக்கர்களது பல அடையாளங்களை அழித்துத்தான் இந்த பள்ளிவாசல் எழுந்தது. என்ற வரலாறும் உண்டு.
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அடிப்படையில் மூன்று வகைப்படுகிறது. அரேபிய பாரசீக துருக்கிய கட்டிட அமைப்பு வடிவம். இவைகள் மினரிட்டிலும் டோமுகளிலும் வேறுபடுத்தப்படும்.
இந்தப் பள்ளிவாசல் பென்சில் போன்ற இரு மினரட்டுகளுடன் நடுவில் வட்டமான கூரை. அதைச் சுற்றி அழகான நான்கு அரைவட்டக் கூரைகள் அமைந்த அமைப்பு.
வெளிப்பகுதி வெகுதூரத்திலே கண்ணைக் கவரும் தன்மையுடையது. உயிருள்ளவற்றை சித்திரமாக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட உள்பகுதி மிகவும் கண்ணைக் கவருகிறது. இங்கே முகம்மதலியின் சமாதியும் உள்ளது.
நாங்கள் சென்ற நாளன்று அங்கே பலர் தொழுதுகொண்டு இருந்தார்கள். இந்த அழகான கட்டிடத்தை வார்த்தைகளால் வர்ணிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதை விட மலுக்கியரால் முன்பு கட்டப்பட்ட பாரசீக சாயலான பள்ளிவாசல் இங்குண்டு. அந்தப் பள்ளிவாசலில் உள்ள மினரட்டைக் கொண்டே இதை பாரசீகத்தின் சாயல் என்கிறார்கள். பழைய கட்டிடங்களில் இது மட்டுமே தப்பியுள்ளது. அதற்குக் காரணம் இந்தப் பள்ளிவாசல் குதிரை கட்டும் இடமாக பாவிக்கப்பட்டது.
இந்த அழகான இடங்களில் பல பயங்கரங்களும் நடந்திருக்கின்றன. எகிப்தில் அன்னிய நாடுகளான கிரீஸ், ரோம் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் என ஆக்கிரமிப்புக் கொலை, புராதன கட்டிடங்களை இடித்தல் கலாச்சாரத்தின் விலைமதிக்க முடியாத பொருட்களைத் திருடுதல் என மேற்கொண்ட செயல்களும் நடைத்தியிருக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவற்று இஸ்லாமிய காலத்தில் அதாவது சிலுவை யுத்தத்தின் பின்பு அராபிய பாரசீக மற்றும் துருக்கியர்கள் இஸ்லாம் என சொல்லிக் கொண்டே அதே அழிவு வேலைகளைச் செய்திருப்பதும் எகிப்தின் வரலாறாகிறது.
முகம்மது அலி துருக்கியின் பிரதான பிரதிநிதியாக வந்தபோது அக்காலத்தில் எகிப்தில் அன்னியரை எதிர்த்த மாலுக்கியரை விருந்துக்கு அழைத்து கபடமாக இந்த கோட்டையில் 500 பேரைக் கொலை செய்தது எகிப்தின் வரலாற்றில் முக்கிய திருப்பம்.
இங்குள்ள பொலிஸ் மியூசியம் இங்கு முன்னாள் ஜனாதிபதி அன்வார் சதாத்தை கொலை செய்த குற்றவாளியையும் மற்றும் பலரையும் வைத்திருந்ததாக சொல்கிறது. இன்னும் ஒரு முக்கியமான இரு பெண்கள் இங்கிருந்தார்கள். 1921 இல் அலக்சாண்ரியாவில் விபச்சார விடுதி நடத்திய இரு சகோதரிகள் 17 பெண்களை கொலை செய்திருக்கிறார்கள். இந்த இரு பெண்களான இராயா((Raya) சக்கீனா (Sakina) பற்றி தற்போது பல நாடகங்கள் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகினறன. நாவல்களும் எழுதப்படுகின்றன. அந்தச் சகோதரிகள் கலைப் படைப்புகளுக்கு கருப்பொருளாகிறர்கள். வெள்ளிக்கிழமை காலை முழுவதும் இந்தக் கோட்டையை சுற்றிப்பார்த்தோம். ஆனாலும் ஒரு கிழமை நின்று பார்க்கத்தக்க இடமாக அது இருந்தது. எகிப்தில் நடக்கும் அரசியல் போராட்டம் பல மேல் நாட்டு உல்லாசப் பயணிகளை முக்கியமாக அமெரிக்கர்களை பயமுறுத்தியுள்ளது தெரிகிறது. அதனால் பல இடங்களை நெருக்கடி இல்லாமல் ஆறுதலாக பார்க்கக் கூடியதாக இருந்தது.