இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , இன்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பற்றிய அவரது சிந்தனைகள் எல்லாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், கடிதங்களை எல்லாம் தொகுத்து அளித்திருக்கிறார், படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வெளியில் சொல்லப்பட்டதும்,சொல்லிக்கொண்டதும் தன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக நம் முன் அவை விரியும்போது, இவற்றினிடையே ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்களையும் மாறாது அவர் வலியுறுத்தும் பார்வைகளையும் பார்க்க முடிகிறது.
ஞானி தன் அளவுக்கு தனக்கு உண்மையாகத்தான் இருக்கிறார். அவ்வப்போது அவர் தன் சக கவிஞர்களைப் பற்றியும் அவ்வப்போது தன் மாறி வரும் அபிப்ராயங்களையும் சொல்லிச் சொல்லும் போது , எல்லோரும் கூட்டாக செயல்படும்போது சில விஷயங்கள் மனதுக்கு ஒத்து வராவிட்டாலும் பாராட்டாது கூட்டுச் செயல்பாட்டிலேயே கவனம் செலுத்தும் காரணத்தாலா, இல்லை, பின்னர் எல்லாம் சரியாகிவிடும், மார்க்ஸிஸம் தான் இந்த முரண்களைச் சரி செய்துவிடும் சர்வரோக நிவாரணி என்ற நம்பிக்கையா, எதுவென்று ஏதும் புரிவதில்லை. ஆனால் இந்த முரண்களை யெல்லாம் தானே முன் வந்து முன் வைக்கும்போது, அவரை நாம் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று கருத முடிவதில்லை. எனினும் ஒவ்வொரு கூட்டு இயக்கத்தின் பின்னும், கூட்டாக செயல்பட வருபவர்களின் அவரவரது உள்நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், பலவாக வேறுபடும் போது, அது அவருக்குத் தெரிந்த போதிலும் அதை மார்க்ஸிஸம் சரி செய்துவிடும் என்று அவர் நம்பினாலும் அந்த முரண்களும் தனி நபர் ஆசைகளும் இல்லாமலாகி விடுவதில்லை. அவரவர் கவித்வ மகுடமும், ஒருமித்த செயல்பாட்டில் கிடைக்கும் பிராபல்யமும் இல்லாமலாக்கி விடுவதில்லை. அவரவர் தனியாகவும் சரி, கூட்டாகவும் சரி, தம் பிம்பத்தை வளர்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருப்பார்கள் போலும். போலும் என்ன?. அது தான்