மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்கää விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.
“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான்ää “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார்ää ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன்ää காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.
பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில்ää ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.