– விரைவில் வெளிவரவிருக்கும் எல்லாளனின் ‘ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்’ நூலுக்காக எழுதிய அறிமுகக்குறிப்புகள் இங்கு ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. –
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள். இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர் குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.