– 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை –
மதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும் கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர் பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.
“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”
என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.