இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.