1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:
15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் ( மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேநீர் இடைவேளை, ஓடும் நதி ) , இரண்டு குறுநாவல் தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள் மூன்று, நாடகம், வெளிநாட்டுப்பயண அனுபவம், திரைப்படகட்டுரைகள் இரண்டு என்று 30 நூல்கள் வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன. அ. மொழிபெயர்ப்புகள், விருதுகள், திரைத்துறை ஈடுபாடு, களப்பணிகள்…… திரைப்படக்கட்டுரைகள் சில மொழிபெயர்த்திருக்கிறேன். ஜே பி தாஸ் என்ற ஒரிய எழுத்தாளரின் சிறுகதைத்தொகுப்பு, திருப்பூர் பின்னலாடைதுறை சம்பந்தமான “ தி நிட்டெட் டூகதர் “ என்ற ஆராய்ச்சி நூல் ஆகியவைதான் மொழிபெயர்த்தவை. சிறந்த சிறுகதையாளருக்கான கதா விருது , சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு, ஏர் இண்டியா குமுதம் குறுநாவல் போட்டிப்பரிசாக அய்ரோப்பா, இங்கிலாநது நாடுகளின் பயணம், மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் ஆகியவைதான். தனியாகக் களப்பணி என்று எதுவும் செய்ய நேரம் வாய்த்ததில்லை.நாவல்கள் களப்பணிகளைக் கோருபவை.ஆனால் வந்து சேரும் அனுபவங்களை எழுதுவதைத் தவிர வேறு நேரம் வாய்க்காத வேலை வாழ்க்கை சங்கக்டப்படுத்துகிறது.