நினைவுகளின் சுவட்டில் – (74)
ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் ரஜக் தாஸ் ஏதாவது சொல்வான். அது மற்றவர்களுக்கு தெரியாத, அவர்கள் பங்கு பெற்றிராத சம்பவமோ, பேச்சோ இப்படி ஏதோ ஒன்று இருக்கும். ரஜக் தாஸ் சொல்லிக்கொண்டிருப்பான். நடுவில் சற்று நிறுத்தி எல்லோரையும் பார்ப்பான். இனி நடக்கும் நாடகத்தை தமிழில் எப்படி சரிவரச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரண “ஹை” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் ரகளை அனுபவித்தால் தான் தெரியுமே ஒழிய சொல்லிப் புலப்பட வைக்கமுடியாது. ”ஹை” என்ற வார்த்தையின் பொருளும் அது வெவ்வேறு கட்டங்களில் சொல்லும் தொனி மாற்றத்தில் பெறும் பொருள் மாற்றத்தையும் தமிழில் எப்படி சொல்வது? சரி, ஏதோ முடிந்தவரை சொல்லிப் பார்க்கவேண்டியது தான்.