‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த, என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு. 1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது றிப்பிடத்தக்கது.
இவரின்முதல்கவிதைத்தொகுப்பு குடையும் அடைமழையும். கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைத் தொகுப்புக்குப்பின். கிண்ணியாவில் வெளியான கனதியான மரபுக் கவிதைத் தொகுப்பாக குடையும் அடைமழையும் தொகுப்பைத்தான் கூறவேண்டும். உண்மையில் கவிஞர்களின் உரைநடைகள் கவித்துவம் மிக்கவை.வரிகளை விட்டும் விலக விடாது ஒரு காந்தம்போலே விழிகளை ஈர்த்துநிற்பவை.அதிலும் நாம் சார்ந்த சூழற்பின்னணியில் பின்னப்பட்டவையெனில் சொல்லவும் வேணுமா?