திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில்இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை. குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.