தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன. நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல் ஒதுங்கியேவாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது.
அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான ‘ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)’ என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே ‘பதிவுகள்’, ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் ‘ஒருங்குறி’ எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.’