இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?