– ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம். 14 மார்ச்சு 2012 –
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கான ததேகூ இன் பதில்
1. உண்மையைக் கூறுவது மற்றும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாஙகத்துக்கு தீவிரப் பிரச்சனைகள் உள்ளன
1.1 2011 செப்டெம்பர் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉபே) 18 ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா ஆற்றிய உரையை அடுத்து,அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும்;; “இலங்கையின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது நேர்மையாகவும் உண்மையாகவும”; இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிஸ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐநாமஉபே இன் 19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.