மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24)
பன்றியாக மாறி வாழ்ந்து அந்த வாழ்க்கையில் சுகம் காணும் இன்றைய பன்றி முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்த கதையைச் சொன்ன போது அதை மறுத்தவர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது மறுத்தவர்களின் வாதங்களையும் பெயர்களையும் அருண் தணிக்கை செய்துவிட்டாரோ?. அப்படி இராது என்று தான் நினைக்கிறேன். பன்றிக்கு பன்றியாக சுகமே வாழ்வதில் மறுப்பிராது .ஆனால் அதைப் பன்றி என்று நாம் அழைத்தால் அது கட்டாயம் அதன் வழியில் சீறும். ஏனெனில் அதற்கு தான் முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்தது நினைவில் இருக்கக் கூடும். . சுகம் கண்டாயிற்று. இதுதான் சுகம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாயிற்று. அது ஆழமாகப் பதிந்தும் போய்விட்டது. பில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, அவ்வப்போது உலகத் திரைப்பட விழாவுக்கெல்லாம் தவறாமல் போய் வந்தும், தமிழ்த் திரைப்படங்களை தராசில் எடை போட வரும்போது ஹாசினிக்கு தமிழ் சினிமாக் கலாசாரமும் அதில் தான் வாழ்வேண்டிய நிர்ப்பந்தங்களும் தான் அழுத்துகின்றன. அழுத்துகின்றன என்று சொல்வது கூட தவறு என்று நினைக்கிறேன்.