அத்தியாயம் மூன்று: மாமா மகன்
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்] மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு…. வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. ‘பார்க்’ ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது. மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான. இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள். குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள். தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய். தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில் அதன் அளவினை உணரமுடிந்தது.