ஊடக அறிக்கை – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) –
இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக் கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள் இனப்படுகொலை நாள் (Holacaust) என ஆண்டுதோறும் அனுட்டித்து வருகிறார்கள். அதனை ஒத்த ஒரு இனப்படுகொலை (Genocide) முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தேறியது. அய்.நா வல்லுநர் குழு அறிக்கையின்படி இந்த கால கட்டத்தில் 40,000 மக்கள் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சு, செல்லடி காரணமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எமது மக்களை சிறீலங்கா இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது. மக்களைப் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுமாறு அறிவித்துவிட்டு அதே இலக்கை நோக்கி பன்னாட்டு சமூகத்தால் தடைசெய்யப்பட்ட தீமுறிக் குண்டுகளையும் (phosphorous) கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) சரமாரியாக ஏவி முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தது.
எனவே இந்த இனவழிப்பு நாளான மே 18 யை தேசிய துக்க நாளாக அனுட்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் மடிந்த மக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்துவதோடு கனடிய மையநீரோட்ட மக்களின் கவனத்துக்கும் கொண்டு வரலாம்.