இப்போது இரண்டு தலைமுறைக்காலம் கடந்த பிறகும் கூட நினைத்துப் பார்க்கும்போது, மிக வேதனையாகத் தான் இருக்கிறது. இன்று அது பற்றிப் படித்து அறிந்து கொள்கிறவர்களுக்கு அது புரியப் போவதில்லை. பண்டிதர்கள் போகட்டும். பிரபலமாகிவிட்ட வெகுஜன எழுத்தாளர்கள் போகட்டும். அவர்களுக்கு இருக்கக் கூடும் எரிச்சலும் பகைமை உணர்வும் இருக்கும் தான். எதிர்பார்க்க வேண்டியதும் கூடத் தான். இருக்காது என்று நினைப்பது அறியாமை. ஆனால் யார் யார் எல்லாம் செல்லப்பாவுடன் தோளோடு தோள் உரசி நிற்கக் கூடும் என்று நாம் எதிர்பார்ப்போமோ அந்த மணிக்கொடிக் கால சகாக்களும், தம்மை நவீன சிந்தனையும் புதுமை நோக்கும் கொண்ட தலைமுறை யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் கூட புரிந்து கொள்ள மறுத்தனர். கேலி செய்தனர். ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில், “ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பாவகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா” என்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர். அவர் யாப்பிலக்கணம் படித்திருப்பார். பல்கலைக் கழகத்தில் வகுப்பும் எடுப்பார் தானே. சங்க கால அகவல் தொடங்கி புரட்சிக் கவி என்று புகழப்படும் பாரதி தாசனின் எண் சீர் விருத்தம் வரை மாற்றங்கள் வருமானால் அதை அவர் கேள்வி இல்லாது ஏற்றுக் கொள்வாரானால், இன்று ஏன் இன்னொரு மாற்றம் பாவகையில் நிகழக் கூடாது என்று எந்த தமிழ் பேராசிரியரும் யோசிக்கவில்லை. இப்போது இந்தப் பேராசிரியர்கள் எல்லாம் செல்லப்பாவுக்கு அஞ்சலி செலுத்துவதென்றால் அவர்கள் சொரியும் புகழுரைகள் சொல்லி மாளாது. செல்லப்பா என்றால் ஒரு இளப்ப உணர்வு அன்று இவர்களிடமெலலாம் காணப்பட்டது. இதை யெல்லாம் கண்டு கொள்ளாது தன் காரியமே கண்ணாகயிருந்தார் செல்லப்பா என்றும் சொல்ல முடியாது. அன்று செல்லப்பா இவர்களையெல்லாம் பொருட்படுத்தி சத்தம் போடுவார். சண்டைக்கு வருவார். வாதம் செய்வார். அனேகமாக தினந்தோறும் அந்நாட்களில் நடந்து வந்த இந்தக் காட்சிகளில் சிலவற்றை, நான் விடுமுறையில் சென்னை வரும்போது நேரில் கண்டிருக்கிறேன். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ஒரு சில இளைஞர்களே. பின் பிச்சமூர்த்தி தந்த தார்மீக ஆதரவும் அவர் கவிதையும். அதற்கு அவர் அளித்த விளக்கங்களும். மூங்கில் காட்டினூடே பாய்ந்து ஓயும் ஒலி” என்று புதுக்கவிதையின் சொல்லப்படாத சந்தம் எந்த தமிழ்ப் பண்டிதருக்குப் புரியும்? சூத்திரங்களாக ஆக்கி, புலவர் வகுப்புக்கு பாடமாக வைத்தால் புரியலாம். . “ஓடாதீர் உலகத்தீரே” என்று புதுமைப் பித்தன் எழுதினால் அதற்கு நீண்ட விளக்கம் தரும் சிதம்பர ரகுநாதன். அது புதுக்கவிதைக்கும் பொருந்தும் என்பதை அவர் உணரவில்லையா?, மறுத்தாரே? இவர்கள் எல்லோரிடமும் இரட்டை நாக்கு பேசியது.