கிடைக்கப்பெற்றோம்: ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – ஆழமும் அகலமும்’ மற்றும் வல்லினம் 2010 மலர்

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மிஅண்மையில் சிங்கப்புரிலிருந்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்’ என்னும் தனது கட்டுரைகளை உள்ளடக்கிய நூலினையும், ம.நவீனை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘வல்லினம்’ இதழின் 2010 ஆண்டு மலரினையும் அனுப்பியிருந்தார். அவருக்கு எமது நன்றி.  முனைவர் ஸ்ரீலக்ஷ்மியின் நூல் பற்றிச் சில வரிகள். இது போன்ற நூல்களின் வருகையும், கட்டுரைகளும் மிகவும் அவசியம். இவ்விதமான பதிவுகள் புலம்பெயர்ந்து தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து படைக்கும் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நூலின் ‘என்னுரை’ என்னும் முன்னுரையில் நூலாசிரியர் ‘என்னைக் கவர்ந்த விஷயங்களுள் இலக்கியம் தலையாயது. இலக்கிய ஆர்வத்தின் உந்துதலால், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகத்தால் இந்நூலை உருவாக்கியுள்ளேன். சிங்கப்பூர்ப் பொருளாதாரத்திற்கு உதவிய தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் இலக்கியம், பண்பாடு போன்ற விஷயங்களில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றனர் என்பதைச் சிங்கப்பூரில் வாழும் மற்ற இனத்தவர் அறிந்துகொள்ள வேண்டும்; சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி உலகத்தமிழர்கள் அறிய வேண்டும் என்னும் வேட்கை எனக்கு உண்டு. இந்த வேட்கையே இந்நூலின் பிறப்புக்குக் காரணமாகும்.’ என்று கூறுவார். மேலும் தொடர்ந்து கூறுகையில் ‘சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருந்தாலும், அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிப்பூக்களைப்போலக் கிடக்கின்றன.  என்னுடைய முயற்சியும் அப்படி வீணாகிவிடக் கூடாது. எதிர்கால ஆய்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றும் என நம்புகிறேன். அக்கரை இலக்கியம் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் என்றோ அணுக விளைவோர்க்கு இந்நூல் அரிய கையேடு. காய்தல், உவத்தல்,  இல்லா மனநிலையோடு உண்மையை உரைக்க அஞ்சக்கூடாது என்னும் காந்திய இலக்கிய நெறியோடு இந்நூலை உருவாக்கியுள்ளேன்’ என்று கூறுகின்றார். ஆசிரியரின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை என்பதையே மேற்படி நூலின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது.

Continue Reading →