வாசிப்பும், யோசிப்பும் -9: எதுவரை.நெட் இணையத்தளத்தில் கே.எஸ்.சுதாகர் எழுதிய ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ என்னும் கட்டுரை பற்றிச் சில குறிப்புகள்.

வாசிப்பும் யோசிப்பும்!//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் –

இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது ‘இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது ‘ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.’ என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.

Continue Reading →

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?

– நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.
 ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
 மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
 சரியா பிழையா தெரியவில்லை. –

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?   குரு அரவிந்தன் எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள்.  இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.  பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது. 

Continue Reading →

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -

பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

Continue Reading →

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான் தனிமை. ஆம்,  தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

Continue Reading →