நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். ‘இன்னும் சொல்லாதவை’ நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.