1.0. முகப்பு
தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.