ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப் படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் அவர் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் மற்ற எவரையும் விட அதிகம் சாகஸம் காட்டக் கூடியவர் என்பதில் எனக்கு பிரமிப்பு. மணிக்கொடிக்கால எழுத்தாளர் எவரையும் விட அக்கால மோகமான சினிமாவில் அதிகம் தன் சாமர்த்தியத்தைக் காட்டியவர். ஜெமினியின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சினிமாவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிச்சமூர்த்தி, வ.ரா பி.எஸ் ராமையா, ச.து.சு. யோகியார் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாரகள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ சொன்னதை, தனக்குத் தெரிந்ததைச் செய்வதற்கும் மேலாக அந்தத் துறையே தனக்கு அத்துபடி ஆகிவிட்டது போல ஒரு புத்தகமே எழுதும் சாகஸம் பி.எஸ் ராமையாவின் ஆளுமையைச் சேர்ந்தது தான். ஆனந்த விகடனோ இல்லை குமுதமோ நினைவில் இல்லை, ஒரு தொடர் கதை எழுதச் சொன்னால் அதற்கும் அவர் ரெடி. குங்குமப் பொட்டு குமாரசாமி என்ற அந்த தொடர்கதை ஒரு வருட காலமோ என்னமோ வந்தது. கதைக்கான பாத்திரங்களையும் சம்பவங்களையும் கணக்கின்றி கற்பனை செய்து கொள்வதில் மன்னன் தான். மாதிரிக்கென்று அவர் கதைகள் சில படித்திருக்கிறேன். அப்போது அவர் வாரம் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாக தவறாது வாரம் ஒரு கதை எழுதித் தந்தவர். அந்தக் கதைகளில் நான் மாதிரிகென்று ஒரு சில படித்ததில் அவரது ஒரு கதையில் நாலு கதைகள் பிய்த்து எழுதத் தேவையான சம்பவங்களும், திருப்பங்களும், தேவையான கதா பாத்திரங்களும் இருக்கும்.
பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.