எம் மண்ணாகிய பூமி
பரந்து விரிந்த எல்லை கடந்த வெட்ட வெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து ஊர்ந்த வண்ணமுள்ளது. அதன்கண் புதன் (Mercury), சுக்கிரன் (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), விண்மம் (யுறேனஸ்-Urenus), சேண்மம் (நெப்டியூன்-Neptune), சேணாகம் (புளுட்டோ-Pluto) ஆகிய ஒன்பது கோள்களும் அடங்கும். சூரியன் சுமார் 456 கோடி 80 இலட்சம் (456,80,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். சூரியன், நட்சத்திரங்கள், ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் இவைகள் வானில் தரித்து நிற்கின்றன. இற்றைக்கு சுமார் 454 கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து தெறித்துச் சூரியனைப்போல் எரிந்து கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் எரிந்த வண்ணம் உள்ளது. இன்றைய ஆய்வின்படி இந்த ஒன்பது கோள்களில் பூமி ஒன்றில் மட்டும்தான் உயிரினங்கள் வாழக் கூடிய காற்று, நீர், வெப்பம் ஆகியவை உள்ளன. எனவே மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிர் வாழ முடியாது. இந்தவகையில் மற்றைய கோள்களிலும் பார்க்கப் பூமி பல இயற்கை அற்புதங்கள் நிறைந்து அதி சிறப்புற்று விளங்குகின்றது. பூமியைத் தோண்டத் தோண்ட வற்றாக் கனிமப்பொருள்கள் பொதிந்திருப்பதைக் காண்கின்றோம். பூமியின் 71 சத வீதப் பகுதி உப்பு நீர் கொண்ட கடலால் மூடப்பட்டுள்ளது.