சில நினைவுகளும் சிந்தனைகளும்: இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா

இக்பால்செ.கணேசலிங்கன்டொமினிக் ஜீவாகொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் – லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது. அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள். இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.

Continue Reading →