பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: “தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்.”