அறிமுகம்
அ. முத்துலிங்கம் 80 களுக்கு முன்னர் ஈழத்தில் இருந்து தொழிலின் நிமிர்த்தம் புலம்பெயர்ந்து சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். உலக வங்கியிலும் ஐ.நா சபையிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றம் பெற்ற காலத்தில் கைலாசபதியால் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அக்காலத்தில் எழுதிய சிறுகதைகள் 1964 இல் ‘அக்கா’ என்ற தொகுதியாக வெளிவந்தது. பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளுக்கு பயணப்பட்டு வாழ்ந்தவர். ஏறத்தாழ 25 வருடம் எழுத்திலிருந்து ஒதுங்கியிருந்து பின்னர் 1995 இல் இரண்டாங் கட்டமாக தமிழ்ப்படைப்புலகில் நுழைந்தார். காலம், அம்மா போன்ற புகலிடச்சஞ்சிகைகள் ஊடாகவும், தமிழகச் சஞ்சிகைகள் ஊடாகவும் சிறுகதைகளை எழுதியபோது தமிழ்நாட்டில் நன்கு அடையாளம் காணப்பட்டார். அதன்பின்னரே திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவருகின்றன.