கனடிய இலக்கிய ஆளுமைகளிலொருவரும், தீவிர சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், போர்ட் ஹோப், ஒண்டாரியோவிலுள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சூழலியல் போராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Never Cry Wolf, The Snow Walker மற்றும் Lost in the Barrens ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான Never Cry Wolf ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த McClelland & Stewart inc. பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்ட காலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவையினை வழங்கியவர். அதன் பின்னரே எழுத்துத் துறைக்கு வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.