அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கோ.நாதன் “புலம் பெயர்ந்தவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி படைத்தால் புலம் பெயர்வு இலக்கியமாகுமா?” என்றொரு கேள்வியினைக் கேட்டிருந்தார். அது பற்றிய எனது கருத்தும் அதனைத்தொடர்ந்து முகநூலில் நடைபெற்ற சிறு கருத்துப்பரிமாற்றம் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
எனது பதில்: “புலம் பெயர்ந்து வாழும் தமிழர் படைக்கும் எதுவுமே புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள்தான் வரும். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம் பெயர்ந்து வாழும் எவரும் படைக்கும் இலக்கியம். அவ்விலக்கியம் அக்கரை மண்ணின் வாழ்வினை விபரிக்கலாம். இழந்த மண்ணின் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தலாம். பிறந்த மண்ணைக்களமாகக்கொண்டும் படைக்கப்படலாம்.
புகழ்பெற்ற யூத இனத்தைச்சேர்ந்த அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பிரிந்த நிலையில் , சிறுவனாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தப்பிப்பிழைப்பதற்காக அந்நியர்களுடன் அலைந்து திரிந்திருக்கின்றார். யூதச்சிறுவனான அவரைப்பெற்றோர் முகம் தெரியாத அந்நிய மனிதர்களுடன் அவராவது தப்பிப்பிழைக்கட்டுமென்று அனுப்பி விடுகின்றார்கள். . தன் இளமைக்கால அனுபவங்களை அவர் தனது புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘The Painted Bird’ என்னும் நாவலில் விபரித்திருக்கின்றார். இவ்விதம் சிறுவனான அவர் அலைந்து திரிந்த சமயம் யூத மக்கள் படும் துன்பங்களை, அவர்கள் மீது நடைபெறும் படுகொலைகளை, யூதப்பெண்கள் மீது புரியப்படும் கூட்டுப்பாலுறவு வன்முறைகளை, இவை போன்ற கொடிய அனுபவங்களையெல்லாம் அப்படி அப்படியே வாசிப்பவர் தம் இதயங்களை உலுக்கும் வகையில் விபரிக்கின்றார் அந்த நாவலில் ஜேர்சி கொஸின்ஸ்கி. இன்று அந்தப்படைப்பு அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்றாகக் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குணா கவியழகன், சோபா சக்தி, தமிழ்நதி, சயந்தன், விமல் குழந்தைவேலு… எனப் புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் பலரின் படைப்புகளின் கதைக்களங்களும் பிறந்த மண்ணின் மீதான சமூக அரசியல் நிகழ்வுகள்தாமே. அவர்கள் யாவரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியமாகத்தானே அழைக்கப்படுகின்றது.”